ஒருவருக்கு மட்டுமே துணை முதல்-மந்திரி பதவி வழங்குவது சரியல்ல: பரமேஸ்வர் பேட்டி!!
கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவா்கள் நாளை (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினார். அப்போது கா்நாடக சட்டசபையில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று இருப்பது குறித்து கடிதம் கொடுத்தார். பதவி ஏற்பு விழா நடைபெறும் நாள் உள்ளிட்ட தகவல்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. கவர்னரை சந்தித்த பிறகு பரமேஸ்வர் கூறுகையில், “புதிய முதல்-மந்திரியை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சி மேலிடம் ஒருவருக்கு மட்டுமே துணை முதல்-மந்திரி பதவி வழங்குவதாக கூறியுள்ளது. இது சரியல்ல. நான் முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்தேன். குறைந்தபட்சம் துணை முதல்-மந்திரி பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். காங்கிரஸ் மீது தலித் மக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் துணை முதல்-மந்திரி பதவியை அந்த சமூகத்திற்கு வழங்க வேண்டியது அவசியம். நான் மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து இதுபற்றி வலியுறுத்துவேன்” என்றார்.