பா.ஜனதாவின் அதிகாரம், பண பலத்தால் நாங்கள் தோல்வி அடைந்தோம்: குமாரசாமி குற்றச்சாட்டு!!
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவுக்கு வந்த ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எங்கள் கட்சிக்கு தோல்வி என்பது புதியதல்ல. எச்.டி.தேவகவுடா தலைமையில் இருமுறை தேர்தலில் தோல்வியை தழுவிய போதும் ஜனதாதளம் (எஸ்) கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதுபோல் மீண்டும் ஆட்சியை பிடிப்போம். கடந்த 6 மாதங்களாக நான் கடுமையாக உழைத்தேன். ஆனால் எனது எதிர்பார்ப்பு பொய்யானது. ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் உண்மையாகியுள்ளது.
தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து வரும் நாட்களில் கட்சியினருடன் சேர்ந்து கட்சியை பலப்படுத்துவோம். ராமநகர் தொகுதியில் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தது பற்றி எந்த விவாதமும் செய்யவில்லை. அது முடிந்துபோன அத்தியாயம். இன்று தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், வருங்காலத்தில் வெற்றி பெறுவார்கள். ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பழைய மைசூரு பகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை பா.ஜனதா தனது அதிகார பலம், பண பலத்தால் அழிக்க முயன்றது. இதனால் இந்த தேர்தலில் எங்கள் கட்சி தோற்றுவிட்டது.
காங்கிரஸ் கட்சி எங்களை விட பெரிய கட்சி. அவர்கள் உத்தரவாத திட்டங்கள் இலவசம் என கூறினர். இப்போது அவர்கள் உத்தரவாத திட்டங்களுக்கு நிபந்தனை என கூறுகிறார்கள். அடுத்து என்ன சொல்ல போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். எங்கள் சமுதாயத்திற்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும். முதல்-மந்திரி பதவியை யார் வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த மக்களின் முதல்-மந்திரியாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.