ஆடு, மாடுகளை மேய்த்தவர் முதல்-மந்திரி ஆனார்: சித்தராமையா கடந்து வந்த அரசியல் பாதை!!
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் போட்டி போட்டனர். நீண்ட இழுபறிக்கு பிறகு 2-வது முறையாக கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை பற்றிய வாழ்க்கை குறிப்புகளை இங்கே பார்க்கலாம். சித்தராமையா 1948-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி மைசூரு மாவட்டம் சித்தராமனகுந்தி கிராமத்தில் விவசாயியான சித்தராமே கவுடா- போரம்மா தம்பதியின் 2-வது மகனாக பிறந்தார். மைசூரு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. முடித்த அவர், அதே பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.
சட்டம் படித்த பிறகு சிறிது காலம் அவர் வக்கீல் தொழில் செய்தார். மைசூருவில் உள்ள வித்யாவா்த்தக கல்லூரியில் அவர் சிறிது காலம் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றினார். சித்தராமையாவின் மனைவி பெயர் பார்வதி, அவருக்கு 2 மகன்கள். ஒருவர் ராகேஷ், இன்னொருவர் டாக்டர் யதீந்திரா. அவர் முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது, தனது அரசியல் வாரிசாக கருதிய நிலையில் ராகேஷ் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் டாக்டரான யதீந்திரா அரசியலுக்கு வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யதீந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். அவர் தற்போது தனது தந்தைக்காக வருணா தொகுதியை விட்டுக்கொடுத்தார். சித்தராமையா தனது வீட்டில் வறுமை காரணமாக தனது தொடக்க கல்வியை ஆரம்பத்திலேயே பாதியில் நிறுத்தினார். குருபா சமூகத்தை சேர்ந்த அவர் சொந்த கிராமத்தில் ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
கல்வி மீதான அவரது ஆர்வத்தை கண்ட உள்ளூர் பள்ளி ஆசிரியர்கள் அவரை அழைத்து வந்து நேரடியாக 5-வது வகுப்பில் சேர்த்து கொண்டனர். விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர் முதல் முறையாக 1978-ம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். மைசூரு தாலுகா வளர்ச்சி கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் கலந்து கொண்டார். 1980-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். பின்னர் 1983-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் லோக்தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். அப்போது தான் முதல் முறையாக அவர் கர்நாடக சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது ஜனதா கட்சி ஆட்சி நடந்தது. ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவரது அரசுக்கு சித்தராமையா ஆதரவு வழங்கியதால், அவருக்கு கன்னட கண்காணிப்பு குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அப்போது தான் அந்த அமைப்பு முதன் முறையாக தோற்றுவிக்கப்பட்டது. கர்நாடக சட்டசபைக்கு இடைக்கால தேர்தல் நடைபெற்ற போது, ஜனதா தளம் சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அப்போது அவர் கால்நடை வளர்ச்சித்துறை மந்திரியாக பணியாற்றினார். 1989-ம் ஆண்டு எஸ்.ஆர்.பொம்மை ஆட்சியில் போக்குவரத்து துறை மந்திரியாக பணியாற்றிய அவர், 1991-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து 1994-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து தேவகவுடா தலைமையில் அமைந்த ஆட்சியில் சித்தராமையா நிதித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். அப்போது ஆடு மேய்த்தவரால் எப்படி பட்ஜெட் தயாரிக்க முடியும் என்று விமர்சனம் எழுந்தது. இதையே சவாலாக எடுத்துக்கொண்ட அவர் மிக சிறப்பான முறையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அவர் இதுவரை 13 முறை கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய அவரது பட்ஜெட்டை பலரும் பாராட்டியது உண்டு 1999-ம் ஆண்டு ஜனதா தளம் கட்சி உடைந்த போது, அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். அதன் பிறகு 1989, 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்த அவர், 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
அப்போது தரம்சிங் தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தபோது துணை முதல்-மந்திரியாக பணியாற்றினார். அதன் பிறகு நடைபெற்ற அரசியல் மாற்றங்களால் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து சித்தராமையா நீக்கப்பட்டார். அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்த வரை காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். அதன் பின்னர் அவர் அஹிந்தா (சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தலித்துகள்) என்ற அமைப்பை தொடங்கினார். அரசியல் மற்றும் நிர்வாகத்தில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார் காலப்போக்கில் அந்த அமைப்பை கலைத்துவிட்டு கடந்த 2006-ம் ஆண்டு சோனியா காந்தி முன்னிலையில் சித்தராமையா காங்கிரசில் சேர்ந்தார்.
காங்கிரசில் சேர்ந்த பிறகு அரசியலில் அவருக்கு திருப்புமுனை ஏற்பட்டது. சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு பிறகு அவரது சொந்த தொகுதி வருணா தொகுதியாக மாறியது. 2008-ம் ஆண்டு காங்கிரசின் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்ட அவர், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ரெட்டி சகோதரர்களின் கனிம சுரங்க முறைகேடுகளை கண்டித்து 2010-ம் ஆண்டு பெங்களூருவில் இருந்து பல்லாரி வரை 320 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.
2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடித்தார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி போட்டியிட்டு பாதாமியில் மட்டும் வெற்றி பெற்றார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவர் படுதோல்வி அடைந்தார். 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்தியும் சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தது அவரது மனதை வெகுவாக பாதித்தது.
இதை அவ்வப்போது வெளிப்படுத்தினார். ராகு, கேது, சனி என எல்லாம் சேர்ந்து தன்னை தோற்கடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகளை குறை கூறினார். ஆட்சியை இழந்த பிறகு சித்தராமையா 2-வது முறையாக எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் அவர் 5 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த நிலையில் தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால் 2-வது முறையாக கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா நாளை (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார்.