மக்களை மீண்டும் முட்டாளாக்கும் அரசாங்கம்!
தற்போதைய அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு போர்வையில் அது குறித்து மும்முரமாக பேசி, இந்நாட்டு மக்களை மீண்டும் முட்டாளாக்கி, ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை பாராளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் சமர்ப்பிக்குமாறு தான் உள்ளிட்டவர்கள் கோரியதாகவும், அவ்வாறான உடன்படிக்கைக்கு வருவதற்கு முன்னர் அனைத்து அரசியல் தரப்புகளுடனும் கலந்துரையாடி நிலைபேறான நிரந்தர தீர்வை எட்டுவது அவசியமாகும் எனவும், நமது நாட்டின் ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு தாமதமாகச் சென்று மிகவும் தோல்வியுற்ற பேச்சுவார்த்தைக்கும் ஒப்பந்தத்திலும் ஈடுபட்டுள்ளனர் எனவும், இதன் பெறுபேறுகளை மக்கள் தற்போது அனுபவித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஸ்மார்ட் கலந்துரையாடல் மற்றும் சிறந்த உடன்பாட்டை எட்டுமாறு பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தாலும், தற்போதைய அரசாங்கம் அது எதனையும் கருத்தில் கொள்ளவில்லை எனவும், தாம் நன்றாகச் செய்வதாக கூறி தம்பட்டமடித்துச் செயற்பட்டதாகவும், அதன் பாதகமான விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேர்ந்துள்ளதாக்கவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளக கடன் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், பொருளாதாரம், வங்கிக் கட்டமைப்பு மற்றும் 220 இலட்சம் பேரும் நிர்க்கதியாகி நாடு அழிந்துவிடும் எனும், இது அரசாங்கத்தின் கொள்கையாக அமையக் கூடாது என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறு பல்வேறு விடயங்களை மக்களுக்கு முன்வைத்து அரசாங்கம் செயற்பட்டால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் மக்கள் சக்தியின் கீழ் எழுவோம் எனவும் தெரிவித்தார்.
இலங்கை வங்கி பிரதிநிதிகள் குழுவுடன் இன்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.