நைஜீரியா நாட்டில் கிராம மக்கள் மோதலில் பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு!!
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிளேட்டு மாகாணத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு கிராமத்தில் கால் நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியின இனத்தவருக்கும்,அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டது. அங்குள்ள ஒரு நிலத்தில் கால் நடைகள் மேய்ந்தது. இதனை தட்டிக்கேட்ட உரிமையாளருக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கோஷ்டி மோதலாக வெடித்தது.
இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர். சிலர் துப்பாக்கியை எடுத்து சுடவும் ஆரம்பித்தனர். இந்த மோதலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும், தாக்கப்பட்டதிலும் அடுத்தடுத்து பலர் இறந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பலர் இறந்தனர்.இதனால் கடந்த 3 நாட்களில் இந்த மோதலுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 85- ஆக உயர்ந்து உள்ளது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. வன்முறை மேலும் பரவாமல் தடுக்க அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. போலீசாரை பார்த்ததும் வன்முறை கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.