ஜப்பான் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ஹிரோஷிமாவில் காந்தி சிலையை திறந்து வைக்க உள்ளார்!!
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் காந்தி சிலையை திறந்து வைக்க உள்ளார்.பிரதமர் மோடியின் 3 நாட்டுப் பயணத் திட்டத்தை விளக்கிய வெளியுறவுச் செயலாளர் வினய் குவத்ரா,”இன்று ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார். ஜி 7 அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
சிட்னியில் நடத்த திட்டமிடப்பட்ட குவாட் மாநாடு நடக்காததால் ஹிரோஷிமாவில் நடத்த ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா நாட்டு தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குவாட் மாநாடு நடைபெறும் இடம் மாறினாலும் அதில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களில் மாற்றமில்லை. இந்த குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர், அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மே 24ம் தேதி பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமர் செல்கிறார். பப்புவா நியூகினியாவில் நடைபெற உள்ள இந்திய – பசிபிக் தீவு ஒத்துழைப்பு பேரவை கூட்டத்தில் பங்கேற்கிறார்,” இவ்வாறு தெரிவித்தார்.