அதானி குழுமம் விதிகளை மீறவில்லை.. உச்ச நீதிமன்றம் அமைத்த கமிட்டி பரபரப்பு அறிக்கை!!
அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்திருந்தது. இந்திய அரசியலில் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹிண்டர்பர்க் அறிக்கை காரணமாக அதானி நிறுவன பங்குகள் கடுமையான சரிந்தன. அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் குழுவை அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி வேலை செய்தற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது. அதானி நிறுவனம் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என செபியும் கூறியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.