செங்கல்பட்டு,திருப்பத்தூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புதிய கட்டிடங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் !!
செங்கல்பட்டில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலும், ராணிப்பேட்டையில் 12 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவிலும், திருப்பத்தூரில் 12 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம், 36 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்று மாவட்ட காவல் அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இம்மாவட்ட காவல் அலுவலகக் கட்டிடங்கள் தரை மற்றும் 3 தளங்களுடன் சுமார் 4,245 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறை, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறைகள், கட்டுப்பாட்டு அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, உணவருந்தும் கூடம், அலுவலக அறைகள், ரேடியோ ஸ்டேஷன், கூட்டரங்கம், கைரேகை பிரிவு, சைபர் லேப், சி.சி.டி.வி. கேமராக்கள், மின்தூக்கி, மின்னாக்கி, தீயணைப்பு கருவிகள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 2617 ஆண்கள் மற்றும் 654 பெண்கள், என மொத்தம் 3271 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளில் 1.6.2023 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.