ஈரானில் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!!
ஈரானில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் நேற்று 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த ஆண்டு மஜீத் கசாமி என்ற இளம்பெண் ஆடைக்கட்டுப்பாட்டை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் காவலில் இருந்த இளம்பெண் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அங்கு ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஈரான் அரசு நேற்று தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளது.
நீதிமன்ற இணையதளமான மிசான் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்துள்ளது. தூக்கிலிடப்பட்ட 3 பேரும் போலீஸ் அதிகாரி மற்றும் துணை ராணுவத்தை சேர்ந்த இரண்டு பேரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. மூன்று பேரும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், வாக்கு மூலம் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அவர்களை விடுவிப்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 7 பேரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளது.