இந்தியர்கள் கிரீன் கார்டு பெற தாமதம் ஏன்?..அமெரிக்கா விளக்கம்!!
இந்தியாவிலிருந்து ஏராளமானவர்கள் விண்ணப்பிப்பதே கிரீன் கார்டு கிடைப்பதற்கு தாமதம் ஏற்படுவதாக அமெரிக்க குடிவரவு சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சென்றவர்கள் அதிகளவில் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்துள்ளதால் கூடுதல் காத்திருப்பு காலம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் இயக்குநரகத்தின் மூத்த ஆலோசகர் டக்ளஸ் ரேண்ட் தெரிவித்துள்ளார். விசா மற்றும் தூதரக பிரச்னைகள் தொடர்பாக அமெரிக்க வௌியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் டக்ளஸ் ரேண்ட் பேசியதாவது, “அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப முன்னுரிமை அடிப்படையில் உலக நாடுகள் அனைத்துக்கும் சேர்த்து 2,26,000 கிரீன் கார்டுகளை தருகிறது.
வேலை வாய்ப்பு அடிப்படையில் 1,40,000 கிரீன் கார்டுகள் உச்சவரம்பாக உள்ளது. இதை கடந்து ஒரு ஆண்டில் ஒரு நாட்டுக்கு கிரீன் கார்டு எண்ணிக்கை அடிப்படையில் 7 சதவீதம் மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதன்படி, ஒரு வருடத்துக்கு குடும்பம் மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையில் 25,620 கிரீன் கார்டுகளை மட்டுமே இந்தியாவுக்கு அளிக்கப்படும். இந்த கட்டுப்பாடு அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால் இந்தியா, சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் விண்ணப்பம் அனுப்புவதால் கிரீன் கார்டு கிடைக்க மிக நீண்ட காத்திருப்பு ஏற்படுகிறது. இந்த முறையை மாற்ற, மறுசீரமைக்க அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெற்றால் மட்டுமே சாத்தியம்” என்று தெரிவித்தார்.