கண்டியை அதிநவீன நகரமாக மேம்படுத்த எதிர்பார்ப்பு!!
மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தேரவாத பௌத்தம் தொடர்பிலான கற்கை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக மேற்படி பல்கலைக்கழகத்தை நிறுவ எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, ஜப்பானுக்கான தனது அடுத்த விஜயத்தின் போது அதற்கான உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக தாய்லாந்து, பூட்டான் போன்ற பௌத்த நாடுகளின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை இன்று (20) சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேரவாத பௌத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அனுசாசனத்தை பெற்றுக்கொள்வதற்காக பௌத்த விகாரைகள் மற்றும் தேவாலகம் கட்டளைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலம் மல்வத்து, அஸகிரிய பீடாதிபதிகளுக்கு இதன்போது கையளிக்கப்பட்டது.
திரிபீடகம் மற்றும் பௌத்த இதிகாச நூல்களை பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை துரிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மகாநாயக்கர்கள் இதன்போது அறிவுறுதியிருந்த நிலையில் அப் பணிகளை விரைந்து முன்னெடுக்குமாறு புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பரை விடுத்தார்.
மேற்படி ஏற்பாடுகளின் போது நான்கு பீடங்களினதும் மாகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு உரிய திருத்தங்களை செய்த பின்னர் அமைச்சரவையில் சமர்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
இன்று காலை வேளையில் மல்வத்து பீடத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதி வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதன் பின்னர் அவருடன் கலந்துரையாடினார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததோடு, ஜனாதிபதி உள்ளிட்ட சகலருக்கு மகாநாயக்கர்களால் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க மூன்று மாதங்களுக்குள் மேற்படி திருத்தச் சட்டமூலத்தை தயாரித்து மகாநாயக்கர்களிடத்தில் கையளித்துள்ளமை சிறப்பம்சமாகும்.
கண்டி நகரதின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அதி நவீன நகரமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, கண்டி மாநகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இவ்வருடத்தில் ஆரம்பிக்க உள்ளதாகவும், நாட்டின் அனைத்து மகாணங்களினதும் அபிவிருத்தி திட்டங்களை விரையில் பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளத்தாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பஹத ஹேவாஹேட்டை மற்றும் குண்டசாலை பிரதேச சபைகளை நகர சபைகளாக மாற்றியமைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் கண்டி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அந்த பணிகள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கண்டி பழைய சிறைச்சாலை மற்றும் தபால் நிலைய கட்டிடத் தொகுதிகளின் சிறப்பம்சங்களை பாதுகாக்கும் வகையில் அப்பகுதிகளை சுற்றுலாப் பிரயாணிகளின் அவதானத்தை ஈர்க்கத்தக்க இடங்களாக மாற்றியமைப்பதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் குருநாகலில் இருந்து கலகெதர வரையில் நிர்மாணிக்கப்படவுள்ள அதிவேக வீதியை கட்டுகஸ்தோட்டை வரையில் நீடிப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதனால் அடையக்கூடிய பயன்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
பெருநகர திட்டத்தின் கீழ் இந்த கண்டி நகரை விரைவாக அபிவிருத்தி செய்ய நான் எதிர்பார்க்கிறேன். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றியடைந்ததன் பின்னர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர முடியும் என நான் நம்புகிறேன். அதன்பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அதிக முதலீடுகள் தேவைப்படுகின்றன. மேலும், அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும். திருகோணமலை புதிய நகரத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தை இவ்வருடத்தில் ஆரம்பிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதன் பின்னர் யாழ்ப்பாண பெருநகர அபிவிருத்தி செய்யப்படும்.
அதேபோல், ஜப்பானிய உதவியின் கீழ், மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ எதிர்பார்க்கின்றேன். இங்கு தேரவாத பௌத்தத்தை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் மனம் குறித்து கற்பிக்க வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
மேலும், விவசாயத்தை நவீனமயமாக்குவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் ஒரு ஹெக்டேருக்கு 08 மெட்ரிக் டொன் அறுவடை செய்ய இதன் மூலம் வாய்ப்பு ஏற்படும். இந்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் ஒரு கறவை மாட்டிலிருந்து 10 லிட்டர் பால் பெறும் திறனை ஏற்படுத்த முடியும்.
மேலும், கண்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஓரிரு நாட்கள் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேலும், சுற்றுலா வழிகாட்டிகளின் பதிவும் மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு தலதா மாளிகை குறித்தும் பௌத்த வரலாறு, மலையக வரலாறு பற்றிய அறிவும் வழங்கப்பட வேண்டும்.
அதன் பின்னர், அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அஸ்கிரிய பீட மகாநாயக்க வண, வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அஸ்கிரி மகா விகாரையின் அபிவிருத்தி தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டதுடன், அஸ்கிரி மகா நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார்.
கடந்த வெசாக் கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்துவதற்குத் தேவையான சமூகப் பின்னணியை உருவாக்கியமைக்காக அஸ்கிரி மகா நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகே, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.