இதற்கெல்லாம் ஒரு மனசு வேணும்… அரசு அலுவலகம் கட்ட 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த விவசாயி !!
இமாச்சல பிரதேசத்தில் விவசாயி ஒருவர் 3 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிலாஸ்பூர் மாவட்டம் கார்சி சவுக் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாகீரத் சர்மா (வயது 74), சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார், மற்றொரு மகன் டாக்சி டிரைவராக உள்ளார். இந்நிலையில், அவரது கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் வருவாய்த் துறையின் கணக்காளர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் தேவைப்பட்டது.
நிலம் வாங்குவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதை அறிந்த விவசாயி பாகீரத் சர்மா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வருவாய்த்துறைக்கு தனது 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். அந்த அலுவலகம் கட்டப்பட்டால் 12 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சாதாரன நிலத் தகராறுகளால் சண்டை ஏற்பட்டு சில நிமிடங்களில் உறவுகள் முறியும் இந்த காலகட்டத்தில், பாகீரத் சர்மா, ஒரு முன்மாதிரியாக விளங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆத்மதேவ் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.