ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அதிர வைக்கும் வியூகம்!!
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை படுதோல்வி அடையச்செய்ததில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. இவர்தான் கர்நாடக காங்கிரசுக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஆதரவை உருவாக்கி கொடுத்தார். இவர் ஏற்படுத்திய ’40 சதவீத கமிஷன் கவர்மெண்ட்’ என்ற கோஷம் பாரதிய ஜனதாவுக்கு மரண அடியாகவே மாறிப்போனது. இதுதவிர ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் சார்பில் ஒவ்வொரு கேள்வியை இவர் கேட்க வைத்தார். அவை அனைத்துக்கும் பாரதிய ஜனதா தலைவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அதுமட்டுமின்றி மோடியின் பிரசாரத்தை சமூக வலைதளங்களில் பிசுபிசுக்க செய்ய வைத்ததிலும் சசிகாந்த் செந்திலுக்கு வெற்றி கிடைத்தது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பா.ஜ.க. பிரசாரத்தை அனைத்து வகையிலும் சமாளித்ததோடு காங்கிரசுக்கு ஆதரவான மனநிலையை மக்களிடம் உருவாக்க செய்ததில் 100 சதவீதம் வெற்றி பெற்றார். இதனால் இவரை பாராளுமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார். அதற்காக சசிகாந்த் செந்திலும் தயாராகி வருகிறார். தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவர் சமீபத்தில் கூறுகையில், ‘தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சரியில்லை. அவர்கள் தற்போதைய அரசியல் நிலைக்கேற்ப செயல்பட்டால் தான் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியும்’ என்று கூறி இருக்கிறார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அரண்டு போய் இருக்கிறார்கள்.