திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது !!
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மூலவர் விமான கோபுரத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. அதையொட்டி 25-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று (சனிக்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை யாக சாலையில் புண்யாஹவச்சனம், ரக்ஷா பந்தனம், மாலை ஸ்ரீவாரி காலகர்ஷணம், 22 மற்றும் 23-ந்தேதிகளில் காலை மற்றும் மாலை யாகசாலையில் மற்ற வைதீக காரியகர்மங்கள், 24-ந்தேதி காலை ஜலாதி வாசம், பிம்ப ஸ்தாபனம் உள்ளிட்ட சடங்குகளும், மாலை மகா சாந்தி திருமஞ்சனம் உள்ளிட்ட யாகசாலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 25-ந்தேதி காலை 7.45 மணியில் இருந்து காலை 9.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் கும்ப ஆராதனம், நிவேதனம், ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி, மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் ஆகியவை நடக்கிறது.
அதன்பின் அக்ஷதாரோஹணம், அர்ச்சக பவனி நடக்கிறது. காலை 10.30 மணியளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.