இம்ரான்கான் ஆதரவாளர்கள் 120 பேரை விடுவிக்க உத்தரவு: பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 120க்கும் மேற்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தோஷகானா ஊழல் வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான் கானை துணைராணுவ படையினர் கடந்த மே 9ம் தேதி கைது செய்தனர். இம்ரான் கான் கைதை கண்டித்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. லாகூரில் உள்ள ராணுவ தளபதி வீடு சூறையாடப்பட்டது.
இந்த வன்முறை தொடர்பாக தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், கட்சி தொண்டர்கள், இம்ரான் கான் ஆதரவாளர்கள் உள்பட 120க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனிடையே, இம்ரான் கைதை கண்டித்து லாகூரில் நடந்த வன்முறைகள் தொடர்பாக இம்ரான் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
* ராணுவ நீதிமன்றங்களில் விசாரணை
தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் முதல்வருமான இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை ராணுவ நீதிமன்றங்களில் விசாரிக்க பாகிஸ்தான் உயர்மட்ட பாதுகாப்பு குழு முடிவு செய்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.