ஜீன்ஸ், லெக்கிங்ஸ்க்கு தடை: பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாடு- அசாம் அரசு அதிரடி!!
அசாம் மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பள்ளி ஆசியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆசிரியர்- ஆசிரியைகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீ சர்ட் போன்ற ஆடைகள் அணிந்து வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு ஆசிரியர் தனது கடமையை செய்யும் போது அனைத்து விதமான கண்ணியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பணியிடத்தில் நல்லொழுக்கம், கண்ணியம், தொழில்முறை மற்றும் வேலையின் நோக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டியது அவசியமாகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.