சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த டாக்டர் தம்பதி!!
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரைச் சேர்ந்த மருத்துவ தம்பதியினர் மோட்டார்சைக்கிள் விபத்தில் உயிரிழந்த தங்களின் 30 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். பெங்களூரு அருகே கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் டாக்டர் தம்பதியின் மகன் சாகேத் தண்ட்வாட் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, ஐஎம்ஏவின் விரார் தலைவரான அவரது தந்தை டாக்டர் வினீத் தாண்டாவதே, தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தார்.
ஐந்து மாதங்களுக்கு முன்புதான் சாகேத்திற்கு திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி அபூர்வாவும் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மகாராஷ்டிரா இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) உறுப்பு தானக் குழுவின் தலைவரான டாக்டர் கதம் கூறுகையில், “தானமாக அளிக்கப்படும் உறுப்புகளால் குறைந்தது 11 பேருக்கு மறு வாழ்வு கிடைக்கும். சாகேத்தின் பெற்றோர் டாக்டர் வினீத் மற்றும் டாக்டர் சுமேதா ஆகியோர் இறந்த தங்கள் மகனின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். நாட்டில் ரத்த தானம் குறித்து நல்ல விழிப்புணர்வு உள்ள நிலையில், உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவை” என்றார்.