திருப்பதி கோவிலில் சாதாரண பக்தர்களின் வசதிக்காக ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனத்தில் மாற்றம் !!
கொரோனா தொற்று அச்சுறுத்தல் நீங்கியதாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட 30 மணியில் இருந்து 40 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். இதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் இன்னும் அதிகமாகிறது. இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி ெவளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பக்தர்களின் வசதிக்காக ஜூன் மாதம் 30-ந்தேதி வரை சாமி தரிசனம் மற்றும் வி.ஐ.பி. தரிசன சேவைகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமை காலை சேவைக்கான விருப்ப ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, 20 நிமிட நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
வியாழக்கிழமை திருப்பாவாடை சேவை தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. இது, 30 நிமிட நேரத்தை மிச்சப்படுத்துகிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனங்களுக்கு பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நேரில் வரும் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே இடைவேளை தரிசனம் வழங்கப்படும். இதனால் தினமும் 3 மணி நேரம் மிச்சமாகும். இந்த முடிவுகள் பல மணி நேரம் கிலோ மீட்டர் கணக்கில் தரிசன வரிசையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழி வகுக்கும். இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி.கள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.