ஜனாதிபதி மீது நம்பிக்கை உள்ளது – ஜீவன்!!
” நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார். எனவே, அவர் தலைமையின் கீழ் இந்நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே, ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கக்கூடிய வகையில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் – தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் நிர்மாணிக்கப்பட்ட ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம் நேற்று 20ம் திகதி அசுபினி எல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு நல்கிய நெதர்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு நன்றிகூற கடமைபட்டுள்ளோம். அதேபோல குறித்த வேலைத்திட்டத்தில் பங்கேற்ற நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஐ.நாவின் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் 6ஆம் பிரிவில், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு நாம் தீவிரமாக செயற்படுவோம்.
இவ்வேலைத்திட்டத்தை முதலில் ஆரம்பித்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம், எதிரணியில் இருந்தாலும் இந்நிகழ்வில் பங்கேற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியிலும் இப்படியான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான சூழ்நிலையை எமது ஜனாதிபதியே ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் என்பதையும் நினைவுகூற வேண்டும்.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார். கைவிடப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஏதுவான நிலைக்கு அவர் நாட்டை கொண்டு வந்துள்ளார். எமது நாட்டை அவர் சிறந்த நிலைக்கு கொண்டுவருவார் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்றார்.