;
Athirady Tamil News

ஆந்திராவில் யூடியூப் பார்த்து கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வாலிபர்!!

0

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கே.கோட்டூரை சேர்ந்தவர் கோபால் (வயது 41) 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சில ஆண்டுகள் பெங்களூரில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வந்தார். தற்போது வார சந்தைகளுக்கு சென்று டீ விற்று வருகிறார். போதைக்கு அடிமையான கோபால், எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி என்று யூடியூப் வீடியோக்களை பார்த்து வந்தார். கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடிக்க விரும்பினார். பெங்களூரு சென்று கலர் பிரிண்டர், தடிமனான வெற்று பாண்ட் பேப்பர்கள், கலர்கள், பச்சை கலர் நெயில் பாலிஷ் வாங்கி வந்தார். 6 மாதங்கள் வீட்டில் ரகசியமாக ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகளை அச்சடித்து வந்தார். ரூ.500 நோட்டுகளில் பாதுகாப்பு இழைக்கு பச்சை நிற நெயில் பாலிஷ் பூசினார். அச்சடிக்கப்பட்ட இந்த நோட்டுகளை வாரச்சந்தையில் புழக்கத்தில் விட்டு வந்தார்.

கோபால் வழக்கமாக வார சந்தைகளில் டீ விற்பதால் அவர் கொடுத்த ரூபாய் நோட்டுகள் மீது கடைக்காரர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோபால் வீட்டில் அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை சந்தைகளில் புழக்கத்தில் விடுவதை தொடர்ந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஊரில் உள்ள காய்கறி கடையில் ரூ.500 கொடுத்து ரூ.50 மதிப்புள்ள காய்கறிகளை வாங்கினார். கோபால் கொடுத்த 500 ரூபாய் நோட்டின் மீது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து பலமனேர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோபால் கொடுத்த 500 ரூபாய் நோட்டை வாங்கி பார்த்தார். அது போலி ரூபாய் நோட்டு என தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோபாலை கைது செய்து, அவரது வீட்டில் இருந்து ரூ.8,200 மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள், பிரிண்டர் மற்றும் வெற்று வெள்ளை காகிதங்களை பறிமுதல் செய்தனர். கோபால் கடந்த 6 மாதங்களாக எவ்வளவு கள்ள நோட்டுகளை அச்சடித்தார் எவ்வளவு கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமம் என்பதால் அதனை அச்சடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.