பெங்களூரு வெள்ளத்தில் சிக்கிய கார் – பெண் ஒருவர் பரிதாப பலி!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. பெங்களூர் நகரின் கே.ஆர்.சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ள நீரில் வழியாக சென்ற எஸ்.யூ.வி கார் ஒன்று சிக்கிக் கொண்டது. அதில் மொத்தம் 6 பேர் பயணம் செய்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி எஞ்சின் அணைந்து போனதால் காரை அங்கிருந்து எடுக்க முடியாமல் போனது. காரை அங்கு இருந்து வெளியே எடுக்க டிரைவர் முயற்சி செய்வதற்குள் மழை வெள்ளம் அதிகமாக சுரங்கப்பாதைக்குள் வந்ததால் கார் நீருக்குள் மூழ்கியது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
தகவலறிந்து போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காரில் இருந்த 6 பேரை மீட்டனர். அதில் ஒரு பெண் மட்டும் நீரில் மூழ்கி முற்றிலும் மயக்க நிலைக்கு சென்றார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போகும் வழியிலேயே பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மழைநீர் தேங்கிய பகுதிகளை முதல் மந்திரி சித்தராமையா நேரில் சென்று பார்வையிட்டார். மழையின் போது சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் கார் சிக்கிக்கொண்ட சம்பவத்தில் காரில் பயணம் செய்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.