உக்ரைனின் பக்மூத் நகரை கைப்பற்றியதா ரஷ்யா?..அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு!!
உக்ரைனின் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த சண்டை நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. மேற்கத்திய நாடுகள் அளித்து வரும் உதவியால் ரஷ்யாவுக்கு உக்ரைன் கடும் சவால் அளித்து வருகிறது.
கிழக்கு உக்ரைனின், முக்கிய நகரான பக்முத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் 8 மாதங்களாக சண்டையிட்டு வந்தது. இதில் ரஷ்யாவின் தனியார் படையான வாக்னர் குழுவினரும் ஈடுபட்டனர். பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஷின் தெரிவித்தார். இந்நிலையில், ஹிரோஷிமாவில் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் நேற்று இது பற்றி நிருபர்கள் கேட்ட போது,‘‘பக்முத் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றவில்லை’’ என்று தெரிவித்தார்.
முன்னதாக , அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜெலன்ஸ்கி பேட்டியளிக்கையில், ‘‘ரஷ்ய படைகளால் பக்முத் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கு எதுவும் இல்லை, ரஷ்ய வீரர்களின் உடல்கள் தான் கிடக்கின்றன ’’ என குறிப்பிட்டிருந்தார். இதில், ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இரண்டு விதமான கருத்துகளை தெரிவித்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.