ஆணைக்குழுக்கள் நாட்டுக்கு எதற்கு?
தேர்தல்கள் ஆணைக்குழுவை சுயாதீமாக இயங்கவிடாத அரசாங்கம், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்ய பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், இந்நாட்டுக்கு ஆணைக்குழுக்கள் தேவையா என்று கேள்வியெழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவி, நீதியான நிர்வாகத்தை தோற்றுவிக்க நாம் இருபத்தோராம் திருத்தத்துக்கு மீண்டும் ஆதரவு அளித்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பார்க்கும் இந்நாட்டிற்கு ஆணைக்குழுக்கள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தேர்தல்கள் ஆணைக்குழு இருப்பதால் அதை சுயாதீனமாக இயங்கவிடாது தேர்தலை நடந்தாதிருக்க அரசாங்கம் தமது செல்வாக்கை பிரயோகிக்கிறது.
பொதுமக்களுக்காக முன்நிற்கும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்ய தற்போதைய அரசாங்கம் பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளது.
இந்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்க்கட்சியினராலா நியமிக்கப்பட்டார், இல்லை. ஆளும் தரப்பாலே நியமிக்கப்பட்டார். தற்போதைய அரசாங்கத்தில் ஆணைக்குழுக்கள் அரசுக்கு கைகோர்த்து இஷ்டத்திற்கு ஆடவில்லை என்றால் பதவி நீக்க முற்படுகின்றனர்.
மின்கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்களுக்காக முன்நின்று நீதிமன்றம் சென்றார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துவேறுபாடுகள், விடயங்கள் இருந்தாலும் அவர் பொதுமக்களுக்காகவே முன் நின்றார்.மின் கட்டணத்தை 200 % ஆல் அதிகரிக்கும்போது அரசாங்கம் விரும்பியவாறு ஆடாமல் அவர் மக்களுக்காக நடவடிக்கை எடுத்தார்.
அவ்வாறு மக்களுக்காக செயற்படாவிட்டால் அது சுயாதீன ஆணைக்குழுவாகாது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட வாக்கெடுப்பில் நாங்கள் எதிராக வாக்களிப்போம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு பயப்படாதீர்கள், அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடாதீர்கள், ஒரு தலைவர் நீக்கப்படுவதனால் அனைத்து தலைவர்களையும் நீக்க முடியாது என்று மறுபுறம் சுயாதீன ஆணைக்குழுக்களில் உள்ள அங்கதவர்களுக்கு நாம் கூற விரும்புகின்றோம்.
எனவே இந்த ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான நியாயமான சுதந்திரமான சூழலை உருவாக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே வரப்போகிறது என்பதை காட்டி இந்த பக்கமிருந்து ஒரு தரப்பையும் அந்தப்பக்கத்தில் இருந்து ஒரு தரப்பையும் தம்பக்கம் எடுக்க முடியுமா என்றே ஜனாதிபதி பார்க்கிறார். ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டி நடத்தப்படாது. முடியுமானால் முன்கூட்டி நடத்துமாறு நாம் சவால் விடுக்கிறோம்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஆடை ஏற்றுமதி சுமார் 20% குறைந்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து சுமார் 150 மில்லியன் டொலர்கள் வந்துள்ளது, ஆனால் கடனை அடைக்க டொலர்கள் வெளியேறும் போதும்,இறக்குமதிக்கு டொலர்கள் வெளியேறும் போதும்,நிலைமை என்னவாகும் என்று பார்க்கலாம்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின்படி பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்படுவதால், பௌத்தத்தை பாதுகாத்து போஷிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.அவ்வாறே,பிற மதத்தினர் தங்கள் மதத்தை பின்பற்றும் கலாச்சார உரிமைகளை போனுவதற்கான ஏற்படுகளையும் பாதுகாப்பை வழங்குவதும் அரசின் பொறுப்பாகும்,எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யுத்தம் நடந்த போது சிங்கள, தமிழ் மக்களை பிரித்தனர், மலட்டு கொத்து என பிரச்சாரம் செய்து முஸ்லிம்கள், சிங்களவர்கள் எனப் பிரிந்தனர். கத்தோலிக்க மக்களையும் பௌத்த மக்களையும் பிளவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது. இடமளியோம்.
தற்போது ஜெரோமின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இதை வைத்து கத்தோலிக்கர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க முடியாது. இதனால் கத்தோலிக்க மக்களையும் இந்து மக்களையும் பிரிக்க முடியாது. இவற்றுக்கு நாம் இடமளிக்கக் கூடாது” என்றார்.