கல்வியாளர் சேவை உத்தியோகத்தர்கள் சுகவீனலீவுப் போராட்டம்!!
நாடு முழுவதிலும் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகள் ஆசிரிய கலாசாலைகள் மற்றும் ஆசிரிய மத்திய நிலையங்களில் பணியாற்றும் இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் நாளை (23.05.2023 செவ்வாய்) சுகவீனலீவுப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவைத் தொழிற்சங்கத்தின் செயலாளர் தம்மிக மீரிகான தெரிவித்தார்.
ஆசிரிய கல்விக்கான சுயாதீனப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கும் செயற்பாடுகள் பல்வேறு அழுத்தங்களால் மந்தகதியில் இடம்பெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆசிரிய கல்வியாளர் சேவை உத்தியோத்தர்கள் எதிர்கொள்ளும் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்து வைக்குமாறு கோரியும், நிறைவேற்றுத்தரச் சேவை எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஆசிரிய கல்வியாளர் சேவைக்கான வரப்பிரசாதங்கள் வெறும் வாய்ப்பேச்சளவிலேயே இடம்பெறுதவற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் – ஏனைய நிறைவேற்றுத்தரச் சேவை உத்தியோகத்;தர்கள் அனுபவிக்கும் வரப்பிரசாதங்களை கல்வியாளர் சேவை உத்தியோகத்தர்;களுக்கும் பெற்றுக்கொடுக்கவும் – குறிப்பாக தரம் மூன்றில் நியமனம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவர் பன்னிரண்டு ஆண்டுகளில் தரம் ஒன்றுக்குப் பதவி உயர்வு பெறுவதற்கு வழிவகுக்குமாறு கோரியும் ஒருநாள் சுகவீனலீவுப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக செயலாளர் தம்மிக தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில்; தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகளில் இருந்து தாம் விலகியிருக்கப்போவதாகவும் இவை குறித்துக் கல்வி அமைச்சுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் தம்மிக குறிப்பிட்டுள்ளார்.