பிரான்ஸில் ஓய்வூதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து பேரணி: கேன்ஸ் திரைப்பட விழா மையம் நோக்கி சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்!!
பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இடையே ஓய்வூதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகின் முன்னனி திரை கலைஞர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே ஓய்வூதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொழிற்சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. அப்போது அதிபர் இமானுவேல் மேக்ரானின் உருவ பொம்மையை தூக்கி எறிந்த போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
திரைப்பட விழா நடைபெறும் மையத்திற்கு செல்லும் சாலைகளை மூடிய போலீசார் போராட்டக்காரர்கள் அங்கு செல்லாத வகையில் தடுத்து நிறுத்தினர். பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை 64-ஆக உயர்த்தும் வகையில் ஓய்வூதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அரசு அந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது. இதனால் பிரான்ஸில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.