யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு- 933 பேர் தேர்ச்சி!!
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.
அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடமும் பிடித்தனர். தேர்ச்சி பெற்றவர்களில் 345 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள், 99 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள், 263 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 154 பேர் எஸ்சி பிரிவையும், 72 பேர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள்.