காலநிலை மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு !!
ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலீத் நாசர் அல் அமெரியினால் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக திங்கட்கிழமை (22) கையளிக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஜனாதிபதி ரணில் ஏற்றுக் கொண்டமை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இலங்கை மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக அரசாங்கத்தின் முன்னெடுப்புகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் 30 முதல் டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் உலகத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்துஜீவிகள் ஆகியோரின் பங்களிப்புடன் ஆரம்பமாக உள்ளதோடு ஐக்கிய அரபு இராச்சியத்தின் 52 ஆவது தேசிய தின விழாவுடன் இணைந்ததாக அரச தலைவர்கள் மாநாடு டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
காலநிலை மாற்றத்தை கையாள்வதில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்களை சமாளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.