எம்.பிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் !!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3 கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன வலியுறுத்தின
அலி சப்ரி ரஹீம் தொடர்பில் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) விசேட கூற்றை முன்வைத்த போதே இரு கட்சிகளும் இவ்வாறு வலியுறுத்தின.
“விமான நிலையத்தில் 3 கிலோ தங்கத்துடன் அலி சப்ரி ரஹீம் எம்.பி. கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவர் ஒரு எம்.பி. என்பதற்காக எந்த சிறப்புரிமைகளும் வழங்கப்படாது அவர் விசாரிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவரின் இவ்வாறான செயற்பாடுகளால் அனைத்து எம்.பி.க்களும் இப்படிப்பட்டவர்கள் தான் என மக்கள் நினைத்து விடுவார்கள். எனவே அவர் மீது உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
“ஹர்ஷன ராஜகருண எம்.பி.யின் கருத்துடன் நாங்களும் உடன்படுகின்றோம். அலி சப்ரி ரஹீம் எம்.பி. தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான செயல் களில் எம்.பி.க்கள் ஈடுபட ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது எனவே அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவும் சுட்டிக்காட்டினார்.