திருப்பதி கோவிலில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த முடிவு !!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஏழுமலையானை தரிசிப்பதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த போதிலும் அதனுடைய புனித தன்மை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கானாவை சேர்ந்த பக்தர் ஒருவர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி கோவிலுக்குள் தனது செல்போனை கொண்டு சென்று கோவிலை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த சம்பவம் பக்தர்கள் அரசியல் கட்சி தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்விற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஒரு சில இடங்களில் தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் திருமலையில் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் ஹரிஷ் குமார் குப்தா முன்னிலையில் திருமலை அன்னமய்யா பவனில் நேற்று பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காவல் துறை மற்றும் பிற துறைகளின் பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கொரோனாவுக்கு பிறகு பக்தர்கள் வருகை மற்றும் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. பாதுகாப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
திருப்பதி தேவஸ்தான அலுவலர் நரசிம்ம கிஷோர் மற்றும் திருப்பதி எஸ்.பி பரமேஷ்வர் ரெட்டி ஆகியோர் தனித்தனியாக திருமலையில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய இடங்கள் குறித்தும் தெரிவித்தனர். திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாதவாறு அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்தனர். போலீசார் மற்றும் விஜிலன்ஸ் பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை இருந்தால் உடனடியாக ஆட்களை நியமனம் செய்து பாதுகாப்பு குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.