பழங்குடியின கிராமத்தில் பணியாற்றி மாணவர்கள் மனதை வென்ற ஆசிரியருக்கு ஊரே திரண்டு பிரியாவிடை!!
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விக்ரம்காட் தாலுகா காஸ்பாடா பழங்குடியின கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அஜித் கோனத் (வயது35). புனேயில் பிறந்து வளர்ந்த இவர் 14 ஆண்டுகளுக்கு முன் காஸ்பாடா ஜில்லா பரிஷத் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நகர் பகுதியில் வளர்ந்த அவருக்கு கிராம வாழ்க்கை புதிதாக இருந்தது. குறிப்பாக அங்குள்ள மக்கள் கல்வியில் பின்தங்கி இருந்ததை பார்த்து மிகவும் வருத்தப்பட்டார். எனவே அவர் அங்குள்ள குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த வரை சிறந்த கல்வியை கொடுக்க முயற்சி செய்தார்.
ஆசிரியரின் முயற்சியால் பழங்குடியின குழந்தைகள் பலர் ஆரம்ப கல்வி பெற்றனர். கல்வியோடு இல்லாமல் ஆசிரியர் அஜித் கோனத் மாணவர்களை கலை, விளையாட்டிலும் ஊக்கப்படுத்தினார். அவர் மாணவர்களை மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு அழைத்து சென்றார். இதன் காரணமாக கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி மக்களின் மனதிலும் ஆசிரியர் இடம் பிடித்தார். மேலும் ஆசிரியர் கிராம மக்களின் குடும்பத்தில் ஒருவர் ஆனார். இந்தநிலையில் சமீபத்தில் ஆசிரியர் அஜித் கோனத் கிராமத்தில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் காஸ்பாடா கிராமத்தில் இருந்து பிரியா விடை பெற்றார். அப்போது 14 ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு கல்வி செல்வம் அளித்த ஆசிரியரை ஊரே திரண்டு வழி அனுப்பி வைத்தனர். ஆசிரியரை பாராட்டி ‘எங்கள் ஆதர்ஷ ஆசிரியர், எங்களின் பெருமை’ என பேனர் வைத்தனர்.
மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாணவர்கள் சாலையின் இருபுறமும் நின்று மலர் தூவியும் நன்றி தெரிவித்தனர். ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைவாத்தியமும் இசைக்கப்பட்டது. ஒருகட்டத்தில் கிராம மக்களின் அன்பை நினைத்து ஆசிரியர் கண்ணீர் விட்டு அழுதார். பணியிட மாற்றலாகி செல்லும் ஆசிரியருக்கு ஒட்டு மொத்த கிராமமே திரண்டு பிரியாவிடை கொடுத்த நெகிழ்ச்சி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.