அமெரிக்க பத்திரிகையாளரை விடுவிக்க ரஷிய நீதிமன்றம் மறுப்பு- மேலும் 3 மாதம் காவல்!!
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், ரஷியா மீது பல்வேறு தடைகள் விதித்தும் ரஷியா போரை நிறுத்திய பாடில்லை. தொடர்ந்து உக்ரைனின் நகரங்களை கைப்பற்றிய வண்ணம் உள்ளது. மேலும், ரஷியாவிற்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வரும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. வால் ஸ்ட்ரீட் பத்திரிகை நிருபர் எவன் ஜெர்ஷ்கோவிச் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி ரஷியாவால் கைது செய்யப்பட்டார்.
அவர் யேகாடெரின்பர்க்கில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்தியுள்ளது. மேலும், அவர் மீதான குற்றச்சாட்டு அபாண்டானது, அவரது கைது தவறானது என அமெரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஜெயிலில் இருந்த நிலையில், பத்திரிகையாளர் எவன் ஜெர்ஷ்கோவிச் வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய மறுத்து, அத்துடன் அவரது ஜெயில் தண்டனையை ஆகஸ்ட் 30-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
பத்திரிகையாளருக்கு எதிராக உளவு பார்த்ததாக சாட்டப்படும் குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்கள் எதையும் ரஷியா அதிகாரிகள் விரிவாக தெரிவிக்கவில்லை. சட்ட நடவடிக்கைகள் குறித்தும் மீடியாக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. கெர்ஷ்கோவிச் வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜரானாரா?. அவன் என்ன சொன்னார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ரஷிய செய்தி நிறுவனம் ஒன்று, பத்திரிகையாளரின் பெற்றோர்கள் நியூ ஜெர்சியில் வசித்து வருகிறார்கள். அவர்கள் தனது மகன் விசாரணைக்காக நீதிமன்றம் வந்துள்ளனர்.
ஆனால், செவ்வாய்க்கிழமை விசாரணையின்போது அவர்கள் இல்லை என நீதிமன்ற அதிகாரி ஒருவர் மூலமாக செய்தி பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஜெர்ஷ்கோவிச் கைது அங்குள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளையும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஜெயிலில் ஜெர்ஷ்கோவிச்சை பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், ஒருமுறைக்கு மேல் அனுமதிக்கப்படவில்லை.