;
Athirady Tamil News

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்!!

0

புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். ‘ஜனாதிபதிதான் நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்’ என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

குறிப்பாக சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து. எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்தன. திமுகவும் விழாவை புறக்கணிப்பதாக திமுக தரப்பில் அக்கட்சியின் எம்.பி திருச்சி சிவா இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவினை புறக்கணிக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.