MV எக்ஸ்பிரஸ் பேர்ள், MT நியூ டயமன்ட் கப்பல்கள் இந்தியா விளக்கம் !!
2021 மே – ஜூன் மற்றும் 2020 செப்டம்பர் ஆகிய காலப்பகுதிகளில் முறையே MV எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலும் MT நியூ டயமன்ட் கப்பலிலும் ஏற்பட்டிருந்த தீ விபத்துகளின்போது வழங்கிய உதவிகளுக்காக இலங்கை அரசாங்கத்திடமிருந்து நட்ட ஈட்டினை அல்லது சேதாரத்தை இந்திய அரசாங்கம் கோரியிருப்பதாக ஊடகங்களில் கூறப்பட்டுள்ளமை குறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிந்துள்ளது. இவ்வாறான அறிக்கைகள் முற்றிலும் தவறானதும் பொய்யானதுமாகும்.
MV எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலும் MT நியூ டயமன்ட் கப்பலிலும் ஏற்பட்டிருந்த தீ விபத்துகளின்போது அதனைக் கட்டுப்படுத்துவதற்காக துரித உதவியை வழங்குமாறு இலங்கை கடற்படையால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இந்தியக் கரையோரக் காவல் படையினரின் கப்பல்கள் இந்திய அரசாங்கத்தால் உடனடியாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
இந்த இரு தீ அனர்த்தங்களின்போதும் ஏற்பட்டிருந்த அபாயகரமான பாதிப்புகளை முறியடிப்பதிலும் இலங்கையின் சமுத்திர சுற்றுச்சூழலிலும் கடலிலும் ஏற்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்துவதிலும் இக்கப்பல்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த மீட்பு பணிகள் மிகவும் முக்கியமான வகிபாகத்தினைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கப்பல்களை சேவையிலமர்த்தியமை, மீட்பு பணிகள் மற்றும் இக்கப்பல்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றுக்கான இழப்பீட்டுக்கான விண்ணப்பம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக ‘மாசுபடுத்துபவர் பணம்செலுத்தும் நெறிமுறையின்’ கீழ் எம்மால் முன்வைக்கப்பட்டது. அத்துடன் குறித்த மன்றத்தில் இலங்கை சார்பாக இந்த கோரிக்கையுடன் இணைந்துகொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கைகளை காப்புறுதியாளர்கள் அல்லது உரிமையாளர்களிடம் சமர்ப்பித்து இழப்பீட்டுக்கான செலவீனத்தை ஏற்கெனவே நிறுவப்பட்ட வழிமுறைகள் மூலம் செலுத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.
இலங்கை அரசாங்கத்திடமிருந்து இந்தியாவால் எந்தவிதமான சேதாரங்களுமோ அல்லது நட்டஈடுகளோ கோரப்படவில்லை என்பது இங்கு வலியுறுத்திக் கூறப்படுவதுடன் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாடு மற்றும் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை ஆகியவற்றினை அடிப்படையகாக் கொண்டே இந்தியா துரித கதியில் இக்கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.