கைதான ஒன்பது பேரும் இன்று பிணையில் விடுதலை!! (PHOTOS)
யாழ்.தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பலாலிப் பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை(23) கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் கைதான ஒன்பது பேரும் இன்று புதன்கிழமை(24) பிணையில் விடுதலை செய்யப்பட்டதோடு , நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாகப் போராட்டங்களைத் தொடர்ந்தும் நடாத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஒன்பது பேருக்கும் எதிராகப் பலாலிப் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருமதி.காயத்திரி சைலஜா முன்னிலையில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் சார்பாக அவரே நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததுடன் சிரேஷ்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது, சட்டத்தரணிகளின் நீண்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஊடகவியலாளர்களும், சட்டத்தரணிகளும் தமது கடமைகளைச் செய்யும் போது அதனை விளங்கிக் கொண்டு பொலிஸார் செயற்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்களும், பொலிஸாரும் ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையின் படி செயற்படலாமெனவும் உத்தரவிட்டார்.
மேலும், கைதான ஒன்பது பேரும் தலா ஒரு லட்சம் ரூபா ஆட்பிணையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.