மன்னார்குடியில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு நினைவுச் சின்னம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் தமிழ் அமைப்புகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டிற்குள் இருப்பதாகவே உணர்கிறேன். தமிழ் மொழியில் ஏற்படுத்திய சீர்திருத்தத்தை முதன்முதலில் செயல்படுத்திய நாடு சிங்கப்பூர்தான். சிங்கப்பூரை மிக குறுகிய காலத்தில் உலகமே வியக்கும் வகையில் முன்னேற்றியவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக நிகழ்வது திராவிட இயக்கம்தான்.
திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன். சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும் சிறப்பாக வாழ அடிப்படைக் காரணமாக இருந்தவர் பெரியாரின் சீடரான சாரங்கபாணி. அண்ணா சிங்கப்பூர் வந்தபோது லீ குவான் யூவுடன் அமர வைத்து சொற்பொழிவு ஆற்ற வைத்தவர் சாரங்கபாணி. சிந்துவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ். தமிழ்நாட்டின் பெருமையை மீட்கும் அரசாக திமுக ஆட்சி விளங்குகிறது. இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என்று நான் கூறி வருகிறேன். தமிழர்களின் தொன்மைக்கான தொல்லியல் ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்தது முதல் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குமான ஆட்சியை நடத்தி வருகிறோம்.
2030-க்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற இலக்கு. சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் வைத்த கோரிக்கைகளை ஆலோசித்து முறையான அறிவிப்புகளை வெளியிடுவேன். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். சிங்கப்பூரில் அண்ணாவின் உரையை கேட்ட லீ குவான் யூ. அவரை தனது மூத்த சகோதரர் என்று பாராட்டினார். மன்னார்குடியில் லீ குவான் யூ பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என்று சிங்கப்பூரில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.