ராஜகுமாரி மரணம் குறித்து விசாரணை !!
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த பதுளையைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண்ணான ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் எத்தகைய பாரபட்சமும் இன்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சட்டத்துக்கு முரணாக எதுவும் இடம்பெறாது என்றும் சந்தர்ப்பமும் வழங்கப்பட மாட்டாது என்பதை தான் உறுதிப்படுத்துவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், விமல் வீரவன்ச உள்ளிட்ட பலரும் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்வாறு தெரிவித்தார்.
“எத்தகைய பாரபட்சமும் இன்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படும். சந்தேகம் வேண்டாம் உறுதியாக கூறுகின்றேன். நீங்கள் இந்த பிரச்சினையை முன்வைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகவே நான் தொலைபேசி மூலம் அது தொடர்பில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அது தொடர்பில் விடயங்களை சபையில் முன் வைத்துள்ளார். அந்த விடயங்களையும் நான் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன் சுயாதீனமாக அந்த விசாரணைகள் நடைபெறும் அது தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என்றார்.