;
Athirady Tamil News

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழக கலாச்சாரத்தின்படி செங்கோல் நிறுவப்படுகிறது!!

0

தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.

என்றாலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது விரிவான தகவல்களை வெளியிட்டார். அமித்ஷா கூறுகையில், “1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகார பரிமாற்றம் நடந்ததை குறிப்பிடும் வகையில் பிரதமர் நேருவிடம் தமிழக செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படும்” என்று தெரிவித்தார்.

புதிய பாராளுமன்றத்தில் இந்தியாவின் விடுதலை சின்னமாக தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவார். அந்த செங்கோல் பாராளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்படும் என்றும் அமித்ஷா விளக்கம் அளித்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் தமிழக செங்கோல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த தமிழக செங்கோல் அலகாபாத் நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த செங்கோலை புதுப்பித்து டெல்லிக்கு கொண்டு வர உள்ளனர். அந்த செங்கோலை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் நிறுவும் வைபவம் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரத்தின் அடையாளமாக நேருவிடம் அந்த செங்கோல் எத்தகைய நிகழ்ச்சிகளுடன் வழங்கப்பட்டதோ அதே போன்ற நிகழ்ச்சிகளுடன் வருகிற 28-ந்தேதியும் விழாவை நடத்த மத்திய அரசு அதிகாரிகள் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக தமிழக செங்கோலை நிறுவும் நிகழ்ச்சியை முழுக்க முழுக்க தமிழக கலாசார பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் ஆட்சி அதிகாரம் மாற்றங்கள் செங்கோல் வழங்கப்படுவதன் மூலமே உறுதிப்படுத்தப்பட்டது. தமிழக மூதாதையர்களின் அந்த பாரம்பரிய சிறப்பை பாராளுமன்றத்தில் நவீன முறையில் பிரதமர் மோடி நிகழ்த்த இருப்பது குறிப்பிடத்தக்கது. 28-ந்தேதி காலை பாராளுமன்றத்தில் தமிழக செங்கோல் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அலகாபாத் மியூசியத்தில் இருந்து எடுத்து வரப்படும் அந்த செங்கோல் கங்கை நீரால் சுத்தப்படுத்தப்படும். பிறகு அதை ஆதீனங்கள் புடைசூழ பாராளுமன்ற சபாநாயகர் இருக்கை பகுதிக்கு எடுத்து செல்வார்கள். அப்போது தமிழர்களின் கலாசார சிறப்பை கொண்ட மேளதாளங்கள் இசைக்கப்படும். அந்த மேளதாளங்கள் முழங்க பிரதமர் மோடியும் அழைத்துச் செல்லப்படுவார். நிகழ்ச்சி நடக்கும் இடம் அருகே வந்ததும் அந்த செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்படும்.

இதையடுத்து கோளறு பதிகத்தில் இடம் பெற்றுள்ள “அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே” என்ற பாடல் வரிகள் பாடப்படும். அந்த சமயத்தில் தமிழக செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி நிறுவுவார். அப்போது ஓதுவார்கள் தொடர்ந்து கோளறு பதிகம் பாடிக்கொண்டே இருப்பார்கள். நாதசுவரமும் இசைக்கப்படும். இதன் மூலம் இந்திய ஜனநாயக வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக கருதப்படுகிறது. இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாக உழைத்த தொழிலாளர்களை பிரதமர் மோடி கவுரவிப்பார். பிரமாண்டமாக நடத்தப்பட உள்ள இந்த விழாவை 19 கட்சிகள் புறக்கணித்தாலும் அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலி தளம், த.மா.கா. உள்பட பல கட்சிகள் பங்கேற்க உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.