ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் கூட்டுறவு வங்கிக்கணக்கில் ரூ.7¾ கோடி திருட்டு: டெல்லி போலீஸ் விசாரணை!!
இமாசலபிரதேச மாநிலம் கங்க்ரா மாவட்டத்தை சேர்ந்த சில நண்பர்கள், 1960-ம் ஆண்டு ஒரு கடன் சங்கத்தை தொடங்கினர். 1972-ம் ஆண்டு, அச்சங்கம், கங்க்ரா கூட்டுறவு வங்கியாக மாறியது. தற்போது, டெல்லியில் 12 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட் போன்ற மின்னணு பண பரிமாற்ற வசதிகளை அளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நடப்புகணக்கு வைத்துள்ளது. நாள்தோறும் தனது நடப்புகணக்கில் இருந்து செட்டில்மெண்ட் கணக்குக்கு ரூ.4 கோடியை மாற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நிலையான உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ரூ.4 கோடியை ரிசர்வ் வங்கி மாற்றுவதுடன், ஒவ்வொரு நாளின் இறுதியில், அன்றைய தினம் செட்டில்மெண்ட் கணக்கில் நடந்த மின்னணு பண பரிமாற்றங்களின் விவரங்களை கங்க்ரா கூட்டுறவு வங்கிக்கு மின்னஞ்சலில் அறிக்கையாக அனுப்பி வைக்கும்.
அதை கூட்டுறவு வங்கி சரிபார்த்துக் கொள்ளும். அதுபோல், கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த பரிமாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்த அறிக்கையில், ரூ.3 கோடியே 14 லட்சம், யாரோ ஒருவரின் நடப்புகணக்குக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்களால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையே, மேலும் அதிர்ச்சி அளிக்கும்வகையில், அடுத்த 2 நாட்களில், ரூ.2 கோடியே 40 லட்சமும், ரூ.2 கோடியே 23 லட்சமும் அந்த நடப்புகணக்குக்கு போனது. ஆக, 3 தடவையாக மொத்தம் ரூ.7 கோடியே 79 லட்சம் திருட்டு போனது. எந்த நடப்புகணக்குக்கு பணம் போனது என்பதை கங்க்ரா கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இருப்பினும், இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை. இதுகுறித்து டெல்லி போலீசில் கங்க்ரா கூட்டுறவு வங்கி முதுநிலை மேலாளர் சதேவ் சங்வான் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் நடக்கும் வங்கியில், ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் நடப்புகணக்கில் நடந்திருக்கும் இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.