ஜார்கண்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் சுற்றுப்பயணம்!!
ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று ஜார்கண்ட் சென்றார். இதற்காக திேயாகர் விமான நிலையத்தில் சென்று இறங்கிய அவரை மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அவர் அங்குள்ள பாபா பைத்யநாதர் கோவிலுக்கு சென்றார். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்த புகழ்பெற்ற கோவிலில், வேத மந்திரங்கள் முழங்க முர்மு சிறப்பு வழிபாடு நடத்தினார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் வாரியம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முர்முவின் வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதில் முக்கியமாக தலைநகர் ராஞ்சியில் நேற்று மாலையில் ஐகோர்ட்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். ரூ.550 கோடியில் 165 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த ஐகோர்ட்டு வளாகம் நாட்டின் மிகப்பெரிய ஐகோர்ட்டு வளாகங்களில் ஒன்றாகும். இதற்காக தியோகரில் இருந்து ராஞ்சி சென்றடைந்த திரவுபதி முர்முவை, அங்குள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில், மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து பிர்சா சவுக் சென்ற ஜனாதிபதி, அங்கு பழங்குடியின தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் தியாகி ஆல்பர்ட் எக்காவுக்கும் அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (வியாழக்கிழமை) குன்றி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக மத்திய பழங்குடி நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்கள் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். அத்துடன் ராஞ்சி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவிலும் மாலையில் பங்கேற்கிறார். ஜனாதிபதியாக 2-வது முறையாக ஜார்கண்ட் சென்றுள்ள திரவுபதி முர்முவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகின்றன. அவர் கடந்த 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.