பொன்னேரி நகராட்சி அலுவலகம் முன்பு 9 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்!!
பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.76 கோடி மதிப்பீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை பாதாள சாக்கடை பணிகள் முடிவடையவில்லை. மேலும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு மின்விளக்கு அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் இதுவரை மின்விளக்குகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இதனை கண்டித்தும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் 9 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு துணை தலைவர் விஜயகுமார் தலைமையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தாசில்தார் செல்வகுமார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் நகராட்சி ஆணையர் கோபிநாத் மற்றும் பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகளிடம் பணிகள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து 45 நாட்களுக்குள் திட்டப் பணிகள் முடிப்பதாகவும் மின் விளக்கு பொருத்தும் பணி உடனடியாக தொடங்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் தாசில்தார் செல்வக்குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.