இம்ரான்கான் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பதவி விலகல்- கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைப்பதாக குற்றச்சாட்டு !!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக் -இ-இன் சாப் கட்சித்தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 9-ந்தேதி அவர் கோர்ட்டில் ஆஜராக வந்த போது துணை ராணுவ படையினர் அவரை கைது செய்தனர். கைதான இம்ரான்கான் ஐகோர்ட்டு உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் அவரது தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி மூத்த தலைவர்கள் தற்போது அக்கட்சியில் இருந்து விலக தொடங்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இம்ரான் கான் பிரதமராக இருந்த போது அவரது மந்திரி சபையில் மந்திரியாக இருந்த ஷரீன் மசாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக அக்கட்சியை சேர்ந்த மேலும் ஒரு முன்னாள் மந்திரியும் ராஜினாமா செய்துள்ளார். அவரது பெயர் பவாத் சவுத்ரி. இவர் இம்ரான்கான் மந்திரி சபையில் தகவல்-ஒளிபரப்புத்துறை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை மந்திரியாக பதவி வகித்தவர். இம்ரான் கானுக்கு மிக நெருக்கமாகவும், கட்சியின் மூத்த தலைவராகவும் தற்போது விளங்கி வந்தார்.
இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், அரசியலை விட்டு விலக போவதாகவும் தெரிவித்து இருக்கிறார். அடுத்தடுத்து தலைவர்கள் பதவி விலகி வருவது தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இது தொடர்பாக இம்ரான்கான் வெளியிட்ட வீடியோவில், ராணுவத்தினருடனான மோதலில் கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பாகிஸ்தான் வரலாற்றில் இதற்கு முன்பு நான் கண்டிராத ஒரு ஒடுக்குமுறையாகும். ஒவ்வொருவரையும் அவர்கள் ஜெயிலில் தள்ள முயற்சிக்கின்றனர் என தெரிவித்து உள்ளார்.