பேட்டரியில் இயங்கும் ஜப்பான் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்; மணிக்கு 309 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து கின்னஸ் சாதனை..!!!!
பேட்டரியில் இயங்கும் ஜப்பான் நாட்டு நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் மணிக்கு 309 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த பிரபல எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான அஸ்பார்க் நிறுவனத்தின் owl ரக கார் இந்த சாதனையை படைத்துள்ளது. இங்கிலாந்தின் எல்விங்க்டன் விமான நிலையத்தில் காரை வேகமாக இயக்கும் முயற்சி நடைபெற்றது. இதில் மணிக்கு 309 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த கார் இயக்கப்பட்டது.
இந்த கார் வெறும் ஒன்றரை வினாடிக்குள் 96 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியும் சாதனை படைத்துள்ளது. பேட்டரியில் இயங்கும் owl காரின் விலை 25 கோடியே 55 லட்சம் ரூபாய் ஆகும். தங்களது காரின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரை இந்த வகை owl கார்கள் 50 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜப்பானின் அஸ்பார்க் நிறுவனம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.