ஹர்ஷவை நியமிப்பதில் பிரச்சினை இல்லை !!
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக நியமிப்பதில் ஆளும் கட்சிக்கு பிரச்சினை இல்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும்
போதே அமைச்சர் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இதனைத் தெரிவித்தார்.
அந்த உறுப்பினரின் நடவடிக்கை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சில கேள்விகளை
எழுப்பியுள்ளதாகவும் எனவே இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில்
எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருவதாகவும்
அமைச்சர் குறிப்பிட்டார்.
சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “நிதிக் குழுவின் தலைவர்
பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
ஜனாதிபதி சொல்வதை செய்யாது இருக்க அரசாங்கத்தில் ஏதாவது பிரச்சினையா? ஹர்ஷ டி
சில்வாவை நியமிப்பதில் என்ன சிரமம்? நிதிக் குழுவில் தங்கள் ஆட்களை நியமித்து இவ்வளவு
திவாலான நாட்டுக்கு முன்னுதாரணமாகத் திகழ முயல்கின்றீர்கள்?
சபாநாயகர் இந்த விடயத்தில் தலையிட வேண்டும். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அதைக்
கையாளுமாறும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி
சில்வாவுடன் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவரது செயற்பாடுகள் தொடர்பில்
எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளன.
எதிர்க்கட்சிகள் ஜனக ரத்நாயக்கவுக்காக நின்றது. அங்கு எதிர்க்கட்சிகள் பேசியதை பார்த்தோம்.
ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியுடன்
கலந்துரையாடவுள்ளதாக எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த பயணம் உடன்படிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். நீங்கள் விவாதிக்க
விரும்பவில்லை என்றால், விவாதங்களில் இருந்து விலகி இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை”
என்றார்.