பழிவாங்கும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது: பசவராஜ் பொம்மை பேட்டி!!
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டம் சிக்காவியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்திருந்தனர். மந்திரிசபை கூட்டத்தில் இலவச திட்டங்களுக்கு ஒப்புதல் மட்டும் அளித்துவிட்டு, அமல்படுத்திவிட்டது போல் நாடகமாடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடனடியாகவே பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். பழிவாங்கும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு, பா.ஜனதாவினர் தலை வணங்கி செல்ல வேண்டும் என்ற பிரச்சினையே இல்லை. பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டங்கள், வளர்ச்சி பணிகளை நிறுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
பல்வேறு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் பா.ஜனதா தோல்வி அடைந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதி. தற்போது காங்கிரஸ் ஆட்சி செல்லும் பாதை சரியாக இல்லை. அவர்கள் ஆட்சி நடத்தும் விதம், பதவிக்காக மோதல் காரணமாக காங்கிரஸ் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.