ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட கோரும் மனு மீது இன்று விசாரணை!!
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு வக்கீலாக கிரண் எஸ்.ஜவலி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 5-ந் தேதி விசாரணையின் போது ஜெயலலிதாவின் வாரிசு ஜெ.தீபா என கோர்ட்டு உத்தரவிட்டு, சொத்துகளை ஒப்படைத்துள்ளதால், கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் பொருட்களையும், அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வக்கீல் கூறி இருந்தார். அப்போது இந்த வழக்கில் முறையாக ஆஜராகி வாதாட ஜெ.தீபா தரப்பில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் இந்த வழக்கை தொடர்ந்திருந்த நரசிம்மமூர்த்தி கூறியபடி ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள், சால்வைகள் இல்லை என்று நீதிபதி கூறி இருந்தார். இதையடுத்து, அரசு கருவூலத்தில் இருக்கும் பொருட்கள் குறித்து கருவூல துறையிடம் இருந்து ஆவணங்களை பெற்று கொடுப்பதாக நரசிம்மமூர்த்தி கூறினார்.
இதையடுத்து, அன்றைய தினம் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 26-ந் தேதி (இன்று) ஒத்திவைத்திருந்தார். அதன்படி, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி வழக்கு விசாரணை பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சொத்து குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றிய போது, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது 11,344 பட்டு சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகள் இல்லை என்று கூறுகின்றனர். இதுபற்றி கர்நாடக அதிகாரிகள், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் இருந்து ஆவணங்கள், தகவல்களை பெற்றுள்ளேன். நீதிபதி உத்தரவின்படி ஆவணங்கள், தகவல்களை கோர்ட்டில் அளிப்பேன். இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி ஒருவர் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கிறேன், என்றார்.