கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பது பா.ஜனதா அல்லாத கட்சிகளின் கடமை: சரத்பவார் பேட்டி!!
டெல்லியில் அதிகாரிகள் மாற்றம், நியமனம் போன்றவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அதிகாரிகள் நியமனம் மற்றும் மாற்றத்தில் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லியில் உள்ள சிவில் சர்வீசஸ் ஆணையத்துக்கு அதிகாரம் அளிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா அல்லாத கட்சி தலைவர்களை சந்தித்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்து மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், 2 நாள் பயணமாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் மும்பை வந்தனர். நேற்று முன்தினம் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரேயை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்தநிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு தனது கட்சி துணை நிற்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சரத்பவார் உறுதியளித்தார்.
இதையடுத்து சரத்பவாருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார். பின்னர் சரத்பவார் நிருபர்களிடம் கூறுகையில், “டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக போராடும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எங்களது கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா அல்லாத அனைத்து கட்சிகளும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பது நமது கடமை. பாராளுமன்ற ஜனநாயகத்தை காக்க போராட வேண்டிய நேரம் இது” என்றார்.