இம்ரான் கான் கட்சியை சேர்ந்த மேலும் 3 தலைவர்கள் ராஜினாமா!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் கடந்த 9-ந்தேதி ஊழல் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக சென்றபோது துணை ராணுவ படையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. ராணுவ வாகனங்கள் எரிக்கப்பட்டன. ராணுவ கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர், மேலும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி மூத்த தலைவர்களும் கைதானார்கள். அவர்கள் தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்தவண்ணம் உள்ளனர். இந்த சூழ்நிலையில் புது திருப்பமாக இம்ரான் கான் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொருவராக தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு முக்கிய தலைவர்கள் 2 பேர் பதவியை விட்டு விலகினார்கள். இதன் தொடர்ச்சியாக மேலும் 3 தலைவர்கள் தாங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்து உள்ளனர். அக்கட்சியின் பொது செயலாளரும், இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் திகழ்ந்த ஆசாத் உமர் தனது பொதுச்செயலாளர் பதவியையும், மையக்குழு உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, இந்த சூழ்நிலையில் என்னால் கட்சியை வழி நடத்த முடியாது. அதனால் பதவி விலக போவதாக தெரிவித்தார். ராஜினாமா செய்த மற்றொரு தலைவரான மலிகா பொக்காரி என்பவர் மே 9-ந்தேதி நடந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஒவ்வொரு பாகிஸ்தானியர்களுக்கும் அன்று நடந்த சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த முடிவை எடுக்க யாரும் தன்னை வற்புறுத்தவில்லை என கூறி உள்ளார். இதே போல சீமா என்பவரும் பதவி விலகி உள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 3 முக்கிய தலைவர்கள் தங்கள் பதவியை துறந்து உள்ளனர். அடுத்தடுத்து தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருவது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.