பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் திருநம்பிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் திடீரென அதிகரிப்பு !!
சமூகத்தில் ஆணாகப் பிறந்து பாலினங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பெண்ணாக மாறியவர்கள் திருநங்கைகள். பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்கள் திருநம்பிகள். திருநங்கைகள் பற்றி அறியப்பட்ட அளவுக்கு திருநம்பிகள் பற்றி அறியப்படவில்லை. அப்படி தமிழகத்தில் சுமார் 2000 திருநம்பிகள் உள்ளனர். சென்னையில் 200-ல் இருந்து 250 வரை திருநம்பிகள் உள்ளனர். போலீசாக, வக்கீலாக, சர்வேயர் ஆக, சுங்க இலாகா, என்ஜினீயர் என பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். நாங்களாக மாறவில்லை. எங்கள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே எங்களுக்குள் இந்த ஹார்மோன் வளரத் தொடங்கிவிட்டது. சமூகமும் பெற்றோரும் எங்களை ஒதுக்குவதால் நாங்கள் தனிமையில் தவிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்கின்றனர். இப்படி பெண்ணாக இருந்து ஆணாக மாறிய சென்னையைச் சேர்ந்த திருநம்பி கூறியதாவது:- எனது தற்போதைய பெயர் அருண் கார்த்திக் (வயது 28) சொந்த ஊர் மதுரை.
நான் என்ஜினீயராக அம்பத்தூரில் ஒரு ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகிறேன். நான் பெண்ணாக பிறந்திருந்தாலும் சின்ன வயதிலிருந்தே பையன் போலவே எனக்குள் எண்ணம் உருவானது. ஒரு கட்டத்தில் பையனை பார்த்தால் இவன் எவ்வளவு சுதந்திரமாக அலைகிறான் முடியை எவ்வளவு அழகாக ஸ்டைலாக கட் பண்ணி உள்ளான் என்று பொறாமையாக இருக்கும். பெண்களைப் பார்த்தால் எனக்கு அவர்கள் லைப் பார்ட்னர் ஆகத்தான் தெரியும். மேக்கப் கூட பிடிக்காது. சுடிதார் போட பிடிக்காது. சேலை கட்ட பிடிக்காது. பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு ஒரு இளைஞனாக ஜாலியாக சுற்றித் திரியத்தான் ஆசையாக இருந்தது. எனக்குள் ஏற்பட்ட இந்த மாற்றத்தை பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். வயதுக்கு வந்ததும் சடங்கு சம்பிரதாயம் செய்த போது நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல.
அப்படி இப்படி என்று சொல்லி ஒரு மணி நேரம் கூட என்னால் அதில் இருக்க முடியவில்லை. என்னை அறியாமலேயே அந்த சமயத்தில் கோபம் கோபமாய் வந்தது. தூக்கம் இல்லாமல் தவித்தேன். யாராவது என்னை போடா வாடா என்று கூப்பிட்டால் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இன்னொரு முறை கூப்பிடு என்று திரும்பத் திரும்ப கூப்பிட சொல்வேன். இந்தச் சூழ்நிலையில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. ஆணாக வாழ்ந்து வரும் என்னால் இன்னொரு பையனை திருமணம் செய்து கொள்ள முடியாது. அந்தப் பையனின் வாழ்க்கையை நான் கெடுக்க நினைக்கவில்லை. இதை என் வீட்டில் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. திருமணம் முடிந்தால் சரியாகி விடும் என்று என்னை சமாதானம் செய்வதிலேயே குறியாக இருந்தனர்.
அதற்குப் பின் வேறு வழி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன். அதன் பின்பும் நான் பலமுறை யோசித்தேன் தனியாக சென்று எப்படி வாழ்வது என்ன செய்வது என எனக்கு நானே கேள்வி எழுப்பிக்கொண்டேன். அதன் பின்பு இன்டர்நெட்டை பார்த்து எனக்கான விடையைத் தேடிக் கொண்டேன். உடனடியாக சென்னை வந்து இங்குள்ள திருநம்பிகளுடன் சேர்ந்தேன். தினமும் 200 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். உணவு டெலிவரிபாயாக வேலை பார்த்தேன். அம்மா உணவகத்தில் தினமும் சாப்பிட்டு வந்தேன். வாழ்வது ஒரு தடவை.
அதை நாம் விரும்பியபடி நல்லபடியாக வாழ்வோம் என்று நினைத்து ஆபரேஷன் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கினேன். முதலில் மார்பக அறுவை சிகிச்சை செய்து அதை அகற்றினேன் முதலில் எனக்கு அறுவை சிகிச்சை பலனளிக்கவில்லை. இரண்டாவது முறை அறுவை சிகிச்சை செய்து பலன் கிடைத்தது. ஹார்மோன் மாற்றத்திற்காக அதற்குரிய ஊசியை ரத்தப் பரிசோதனை செய்து எடுத்துக் கொண்டு வருகிறேன். 6 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து ஊசி போட்டு வருகிறேன். 45 வயது முதல் 55 வயது வரை இந்த ஊசியினை போட வேண்டும். கர்ப்பப்பையையும் எடுத்து ஆணுக்கான ஹார்மோன் உடலில் மாறத் தொடங்கியது.
அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக எனது குரல் மாறிவிட்டது. மீசை வளர்ந்தது. தாடி வளர்ந்தது. எனது தலை முடியை ஒரு நல்ல இளைஞனைப் போல கட் பண்ணி கொண்டேன். வெளியில் செல்லும்போது இந்தத் தோற்றத்தை பார்த்து தம்பி, சார், வாடா என்று அழைக்கும் போது உலகத்தை ஜெயித்த மாதிரி ஒரு எண்ணம் எனக்குள் மகிழ்ச்சியில் துள்ளியது. எல்லா ஆண்களைப் போல சரளமாக ஜாலியாக ஐ.டி. கம்பெனிக்கு வேலைக்கு போய் வருகிறேன். ஒரே கவலை பெற்றோர் என்னிடம் பேசுவதில்லை. தனிமை என்பது மிகப்பெரிய கொடுமை. நாங்களாய் தேடிக் கொண்டதில்லை.
எனவே சமூகம் எங்களை ஒதுக்க கூடாது. திருநங்கைகள், திருநம்பிகளை திருநர் என்று அழைக்க வேண்டும். திருநங்கைகள், திருநம்பிகளுக்காக குரல் கொடுப்பதற்காக அரசு அமைத்துள்ள நல வாரியத்தில் தோழி அமைப்பை சேர்ந்த சுதாவுடன் நானும் உறுப்பினராக உள்ளேன். எங்கள் சமூகத்துக்காக நான் இதன் மூலம் பல்வேறு பணிகளை அவர்களுக்காக செய்து வருகிறேன். எனக்கும் திருமணம் செய்ய ஆசை. விரைவில் அது நடக்கும். ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பேன். என்னை போல் தமிழகத்திலும் சென்னையிலும் பல திருநம்பிகள் வாழ்ந்து வென்று காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன் நடை போட்டு வருகிறோம் என்றார்.