தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு !!
தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கேரள-தென் கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, இந்த இரண்டு நாட்களிலும் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.