;
Athirady Tamil News

கேரளா வழியாக ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.17 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!!

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா வழியாக பல்வேறு மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயில் புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அந்த ரெயில் பாலக்காடு ரெயில் நிலையம் வந்த போது, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சூரஜ் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த ஒருவரது நடவடிக்கை சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததால் போலீசார் அவரை சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது அவர் தனது இடுப்பில் துணியால் பணத்தை கட்டி மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் வைத்திருந்த ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது. அந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் கருதினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பணத்தை கொண்டு வந்தவர் கோட்டயம் மாவட்டம் ஈராற்று பேட்டையை சேர்ந்த முகமது ஹாஷிம் (வயது 52) என்பதும், சேலத்தில் இருந்து அங்கமாலிக்கு பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருப்பதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.